சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010
33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.
பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.
http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx
ச.வே.சு - 81
அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை மணிவாசகர் பதிப்பகம், ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.
02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.
தொல்காப்பிய வரிசை
நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்
சங்க இலக்கிய வரிசை
திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
சிலப்பதிகார வரிசை
மங்கலவாழத்துப்பாடல், மனையறம்படுத்தகாதை, அரங்கேற்றுகாதை, அந்திமாலை சிறப்பு செய்காதை, இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி, வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவவரி, புறம்சேரி இறுத்த காதை, ஊர்காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழல்படு காதை, கட்டுரை காதை, காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம்தரு காதை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம், தெளிவுரை.
தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009
புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....
புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....
தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.
புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.
வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.
புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.
பொருளடக்கம்
தனி மனிதப் பதிப்புகள்
தற்போது விற்பனையில்....
விலை : ரூ 95.00
பக்கங்கள் : 320
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18
தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924
e-mail : thamizhbooks@gmail.com
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு புதிய பக்கத்தை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
'மஹாகவி'யின் ''பொருள் நூறு''
இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.
பாயிரம்
1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.
கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.
தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.
அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.
மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.
வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.
படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.
தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.
தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.
சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.
இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.
எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.
நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.
இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.
கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.
சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்
சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...
‘‘ ஆழப் புதைந்த அறம்போல்
முளைத்தெழுந்தாள்
வாழி அவளுக்கென் வாழ்த்து ’’ என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி
அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,
‘‘ பார்த்ததே பார்த்த பாங்கில்
பாவை கல்லாகி விட்டாள் ’’
எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,
சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.
‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.
‘‘ அன்று பிறந்து
இன்று இறப்பதுள்
ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்
அப்பனே மகனாகி
வளர்ந்து
உயிர் ஓய்தல் அற்று
உயர்வு ஒன்றினை
நாடலே உண்மை....’’
என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.
கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும்.
மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.
மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.
‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்
மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;
‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’
நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.
‘‘ வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு ’’
இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.
எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.
‘‘ சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...
வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். ’’
உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.
புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.
அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ
எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு
கவிதை:
‘‘ அம்பு வில் நம் மூதாதையர் கருவி
ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
போயினான்.
எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
வீரவான் விழுந்தனன்.... விலாவில்
ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே ’’
காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.
கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.
கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.
‘‘ அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே
ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே
அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி
இருபுறம் கூர் எடுத் தின்னா
புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே. ’’
அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்
சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.
இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.
‘‘ அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க
உறையின் நீங்கி உலகு வலம் வந்து
சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்
செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்
கைகளில்
தேவீ, கலையின் தெய்வமே நீ இக்
காவியம் முடிகிற வரை எம்
சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே. ’’
ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.
ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.
‘‘ மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்
ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
ஈற்றிலே இரண்டொரு நாவல்
தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே ’’
கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.
வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.
‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.
அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்:
‘‘ வழியெலாம் கற்கள் வைத்தார் தமது
சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
பெரிய
பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி
வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
கோயிலிலும் கல் குடியிருத் தினரே ’’
இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.
மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.
‘‘ எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்
சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்
அதிலே,
ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்
பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்
எச்சிறிது எப்பெரிதினுக்கும்
ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.’’
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.
மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.
அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல
மஹாகவியும் பேசுவார்:
‘‘ இன்னவை தாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்..’’
தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.
சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.
‘‘ இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள் ’’
அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.
ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.
‘‘ ‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்
நன்று, நன்று!
என்று தன்
காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்
சென்றவன் மீண்டனன். சிரித்தான்
இன்று போனவன் நேற்று வந்தனனே’’
மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.
நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,
பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.
மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.
இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.
ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன். - சிற்பி பாலசுப்பிரமணியம்
முன்னீடு
ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.
இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.
அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.
நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!
குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.
'வரலாற்றில் வாழ்தல்’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’
அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.
என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.
குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.
கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.
நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.
அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.
கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.
பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.
இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - எஸ்.பொ
128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு மித்ர வெளியீடாக வந்துள்ளது.
இதன் விலை ரூ 100.00
மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்
'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.
காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.
தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.
அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\
2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்
பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை
'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்
25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...
பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.
“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.
“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது
பாரதி கேட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”
இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?
3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி
அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....
தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....
.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.
இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...
இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு..
வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091
மறை பொருள் வாசிப்பு
இவ்வறே தான் நவீன ஓவியங்களும். நேரடியான எழில் மிகு ஓவியங்களைவிட கோடுகள், கிறுக்கல்கள் மிகுந்த நவீன ஓவியங்கள் நேரடியாக எதையும் கூறாமல், மறை பொருளிலேயே அதன் வெளிப்படுகளைத் தருகின்றன.
எழுத்துக்கள், கவிதைகள், ஓவியங்கள் போலவே படங்களும் சில வேளைகளில் சொல்லாத சேதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக அமையலாம்.
இவ்வாறு அண்மையில் என் கண்ணில் பட்ட ஒரு மாத இதழின் அட்டைப்படத்தில் மறைபொருள் பல உள்ளதை என்னால் உணர முடிந்தது.
( படத்தை அழுத்துவதன் மூலம் மிகப் பெரிய படத்தை நீங்கள் பார்வையிடமுடியும்.)
இவ் இதழின் அட்டைப் படத்தில் காணப்படும் வாசகங்கள், இதழின் தலைப்பு, இதழின் பெருமை, புகைப்படம் ஆகிய விடயங்களைக் கொண்டு வாசகர்கள் உணரக்கூடிய மறை பொருள் யாவை.
மிகச் சிறந்ததும், மிகச் சரியானதுமான மறைபொருளை உணர்த்தும் வாசகருக்கு, விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள, 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பட்டியலில் இருந்து அவர் விரும்பும் புத்தகங்கள் இரண்டினை வழங்கவுள்ளோம்.
தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007
அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில், 26 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தினத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.
இரு வகைப்பாடுகளில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை. மூன்று வகைப்பாடுகளில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. வகைப்பாடு 17 இல் மானிடவியல், நிலவியல் எனத் துறை வேறுபட்டுள்ளமையும், நடுவருள் இருவர் இரு நூல்களுக்கும் முதற் பரிசு மதிப்பெண் கொடுத்துள்ளமையும் கருத்தில் கொள்ளபட்டு, பரிசுகள் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே பதிப்பகம் தென்திசை பதிப்பகம் பதிப்பித்த மூன்று புத்தகங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.
1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை
புத்தகம் : திருத்தொண்டர் காப்பியம்
எழுத்தாளர் : சூ.இன்னாசி
பதிப்பகம் : காவ்யா பதிப்பகம்
2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை
புத்தகம் : கனவைப் போலொரு மரணம்
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
3.புத்தகப் பிரிவு : புதினம்
புத்தகம் : நதியின் மடியில்
எழுத்தாளர் : ப.ஜீவகாருண்யன்
பதிப்பகம் : அருள் புத்தக நிலையம் - கடலூர்
4.புத்தகப் பிரிவு : சிறுகதை
புத்தகம் : ஆலமர இடையழகு
எழுத்தாளர் : எழில்வரதன்
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )
புத்தகம் : அக்கினிக் குஞ்சு
எழுத்தாளர் : முனைவர் மா.பா.குருசாமி
பதிப்பகம் : காந்திய இலக்கியச் சங்கம் - மதுரை
6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
புத்தகம் : மருது சகோதரர்கள்
எழுத்தாளர் : சு.குப்புசாமி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
7.புத்தகப் பிரிவு : திறனாய்வு
புத்தகம் : சிலம்பில் பாத்திரங்கள் பங்கும், பண்பும்
எழுத்தாளர் : முனைவர் கா.மீனாட்சி சுந்தரம்
பதிப்பகம் : ருக்மணி-இராமநாதன் அறக்கட்டளை - காரைக்குடி
8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
புத்தகம் : வ.ஐ.சுப்பிரமணியம் கட்டுரைகள் ( இரண்டு தொகுதிகள் )
எழுத்தாளர் : வ.ஐ.சுப்பிரமணியம்
பதிப்பகம் : அடையாளம் - திருச்சி
9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
புத்தகம் : அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
எழுத்தாளர் : மு.சுப்பிரமணி
பதிப்பகம் : சீதை பதிப்பகம்
10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)
புத்தகம் : உலக சினிமா வரலாறு ; மௌனயுகம்
எழுத்தாளர் : அஜயன் பாலா
பதிப்பகம் : தென்திசைப் பதிப்பகம்
11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
புத்தகம் : நடுநாட்டுச் சொல்லகராதி
எழுத்தாளர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்
புத்தகம் : கலை வரலாற்றுப் பயணங்கள்
எழுத்தாளர் : மு.ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் : சேகர் பதிப்பகம்
13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
புத்தகம் : தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்
எழுத்தாளர் : அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் : அனிதா பதிப்பகம் - திருப்பூர்
14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
புத்தகம் : புதுச்சேரி மாநிலம் - வரலாறும் பண்பாடும்
எழுத்தாளர் : முனைவர் சு.தில்லைவனம்
பதிப்பகம் : சிவசக்திப் பதிப்பகம் - புதுச்சேரி
15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்
புத்தகம் : பெரும்புகழ் எறும்புகள்
எழுத்தாளர் : முனைவர் மலையமான்
பதிப்பகம் : அன்புப் பதிப்பகம் - சென்னை
16.புத்தகப் பிரிவு : பொறியியல், தொழில்நுட்பம்
புத்தகம் : மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்
எழுத்தாளர் : உலோ.செந்தமிழ்க்கோவை
பதிப்பகம் : பாவை பப்ளிக்கேஷன்ஸ்
17.(அ)புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )
புத்தகம் : பண்பாடு ; வேரும் விழுதும்
எழுத்தாளர் : சு.இராசரத்தினம்
பதிப்பகம் : தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன் - கனடா
17.(ஆ)புத்தகப் பிரிவு : நிலவியல் ( மானிடவியல், சமூகவியல், புவியில் )
புத்தகம் : பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்
எழுத்தாளர்கள் : முனைவர் ஜி.மணிமாறன், கே.ரேணுகா
பதிப்பகம் : ரேணுகா பதிப்பகம் - திருநெல்வேலி
18.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்
புத்தகம் : இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்
எழுத்தாளர்கள் : டாக்டர் ஜி.பாலன், டாக்டர் டி.தட்சிணாமூர்த்தி
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
19.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
20.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்
புத்தகம் : மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4
எழுத்தாளர் : டாக்டர் இரா.மாணிக்கவாசகம்
பதிப்பகம் : அன்னை அபிராமி அருள் - சென்னை
21.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
புத்தகம் : உயிர்காக்கும் சித்த மருத்துவம்
எழுத்தாளர் : டாக்டர் கே.ஏ.சிதம்பரகாங்கேயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
22.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்
புத்தகம் : மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும்
எழுத்தாளர் : முனைவர் க.விநாயகம்
பதிப்பகம் : ஸ்ரீ அன்னை நூலகம் - திண்டிவனம்
23.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்
புத்தகம் : கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு )
எழுத்தாளர்கள் : முனைவர் சு.வசந்தி, முனைவர் பி.இரத்தினசபாபதி
பதிப்பகம் : வனிதா பதிப்பகம் - சென்னை
24.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்
புத்தகம் : ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும்
எழுத்தாளர்கள் : முனைவர் வெ.சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ்
பதிப்பகம் : மெர்க்குரிசன் பப்ளிக்கேஷன்ஸ் - சென்னை
25.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்
புத்தகம் : தமிழகச் சுற்றுச் சூழல்
எழுத்தாளர் : இரா.பசுமைக்குமார்
பதிப்பகம் : தாமரை பப்ளிக்கேஷன்ஸ்
26.புத்தகப் பிரிவு : கணிணியியல்
ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.
27.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
புத்தகம் : தமிழர் கலை இலக்கிய மரபுகள்
எழுத்தாளர் : முனைவர் ஆறு.இராமநாதன்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
28.புத்தகப் பிரிவு : வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம்
ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.
29.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு
நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
30.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்
புத்தகம் : திராவிட இயக்க வரலாறு
எழுத்தாளர் : கே.ஜி.இராதா மணாளன்
பதிப்பகம் : பாரி நிலையம்
31.புத்தகப் பிரிவு : விளையாட்டு
ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.
பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கும், பதிப்பகங்களுக்கும் விருபா தளத்தின் வாழ்த்துக்கள்.
ஈழத்து இலக்கியம்
ஈழத்து இலக்கியம்
நவீன ஈழத்துப் படைப்பிலக்கியம் பற்றி பூமிப்பந்தெங்கணும் இன்று பேச்சடிபடுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரத்தின் பயனாக பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு நடுவேயும் அவர்கள் நமது பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கலாச்சார வெளிப்பாடுகளை ஊக்கத்தோடு நிகழ்த்துகிறார்கள். இலக்கிய ரீதியான அவர்களின் முயற்சிகளை அவர்களது பல்வேறு விதமான பத்திரிகை, நூல் வெளியீட்டு முயற்சிகள் தெரியப்படுத்துகின்றன. இந்தவிதமான புலம்பெயர்ந்த இலக்கிய முயற்சி, ஈழத்தின் இலக்கிய முயற்சிகளின் இன்னொரு பரிணாமமே என்பதனை வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. உலக ரீதியாகவே ஈழத் தமிழர்களால் தெரியப்படுத்தப்பட்டு வரும் இந்த இலக்கிய முயற்சியை உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்குகிறார்கள். ஆழத்து இலக்கியத்தின் வளத்தினை முழுமையாக அறிவதற்கு விரும்புகிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமன்றி எல்லா உலகத் தமிழருக்குமே ஈழத்துச் சிறுகதைப் போக்கினையும் செழுமையையும் அறிந்து கொள்ளவதற்கு இந்தத் தொகுதிகள் உதவி செய்யும். அதன் காரணமே அக்கதைத் தொகுதிகளுக்கான இந்த விரிவான அறிமுகவுரை.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், தென்னாப்பரிக்கா, பிஜித் தீவுகள், மொரிஷியஸ் என்பவை இவற்றிலே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. மேற்கூறியவற்றுள், இந்தியா இந்தத் தமிழ்பேசும் மக்கள் திரளின் முதல் வசிப்பிடமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்து போயினர்.
இவ்வாறு தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற நாடுகளில் இலங்கை மிகவும் முக்கியமானது. இலங்கை தவிர்ந்த மற்ற நாடுகளின் புலப்பெயர்ச்சி கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தொடங்கிற்று. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்புலப் பெயர்வு நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவுக்கு வெகு அருகிலே இலங்கை அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. அருகிலிருந்த காரணத்தால் அதிக தொகையில் புலம்பெயர்ந்து, தமது வாழிடத்தை இங்கே உருவாக்கிக் கொண்டனர் தனியாகவே வாழவும் தொடங்கினர். தமிழ்மொழி என்ற பொதுத்தன்மை ஒன்றினைவிட மொழி அமைப்பு முதல் பண்பாட்டுப் பழக்கங்கள், பொருளியல், சிந்தனைப் போக்குகள் வரை தங்களுக்கென்று பல தனித்தன்மைகளை இவர்கள் கொண்டு வாழத்தொடங்கினார்கள். இலக்கிய வளர்ச்சிப்போக்கும் இந்தத் தனித்துவ நெறி வழியிலேயே அமைந்தது. தமிழலக்கியம் என்று குறிக்கப்படும்போது அது தமிழ் நாட்டிலே மட்டும் தோன்றுகின்ற இலக்கியமாக இருக்க முடியாத நிலைமையும் உண்டாகியுள்ளது. ஆங்கில, அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியிலே எழுதப்பட்டாலலும் சொற்கள், மொழிநடை, உள்ளடக்க முறைகள் என்பன எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைப் போலவே தமிழகத்தில் வளர்ந்த இலக்கியத்திற்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலே கூறிய அமெரிக்க, பிரித்தானிய மக்களின் வாழ்க்கை முறைகளும் இவ்விதமே வித்தியாசப்பட்டுள்ளன.
பழந்தமிழ் இலக்கிய மரபில் இலங்கை ‘ ஈழம்” என்றே குறிக்கப்பட்டு வருகின்றது. ‘ஈழ மண்டல நாடெங்கள் நாடே” என்று பேசப்பட்டு வந்திருக்கின்றது, ஈழத்தமிழிலக்கியத்தின் சமூக அடிப்படை, இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசம் மக்கள்திரளின் வாழ்க்கை அமைப்பேயாகும். அத்திரளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. அகமொழி, சமய பண்பாடு, சமூக அமைப்புமுறை என்பவற்றின் அடிப்படையிலே இம் மூன்று பிரிவினரும் அமைகின்றார்கள். ஒன்று இங்கு வரலாற்றுக் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள். இவர்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியிலே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இரண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு தெற்கு, மத்திய பகுதிகளிலே தலைமுறை தலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற இஸ்லாமிய சமயத்தினர். மூன்று த்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரித்தானியரால் இந்தியாவில் இருந்து, இலங்கையின் தேயிலை ரப்பர் ஆகிய பொருந்தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள்.
இம்மூன்று பிரிவினரையும் மொழி அடிப்படையில் ஒரே தொகுதியினராக நோக்கும் போக்கு வளர்ந்துள்ளது. முதலாவது, மூன்றாவசது பிரிவினரை இறுக இணைப்பதற்கான அரசியல் சமூக இயக்கங்கள் கடந்த தசாப்தங்களாக இயங்கி வருகின்றன.
இலங்கையின் பண்பாட்டு அமைப்பில் இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படுவர்கள் முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்களே. வரலாற்றுக் காலந்தொடங்கி, பின்னர் ஏற்பட்ட தென்னிந்தியப் புலப் பெயர்வால் வந்து குடியேறி புவியியல், பண்பாட்டு அடிபெ;படையில் அவர்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.
இலங்கையின் மக்கட்தொகை விபரத்தை தோராயமாக பின் வருமாறு குறிப்பிடலாம்: சிங்களவர் தவிர இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர்9.3% இலங்கை முஸ்லிம்கள். 6.5% தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் 27% ஆக மொத்த மக்கட்தொகையில் உள்ளனர். ( இது 1975-ம் ஆண்டு மக்கட் தொகை விபரம்.)
***
ஈழத்து இலக்கிய மரபின் முதல்வராக சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் குறிப்பிடப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் செய்யுட்களில் ஆழத்தைப் பற்றிய எந்தத் தகவல்களும் காணப்படவில்லை. இலங்கையில் இன்றுகிடைக்கின்ற காலத்தால் முந்திய தமிழ் நூல் ( கி.பி 1310) போசராசரால் எழுதப்பட்ட ''சரசோதிட மாலை'' என்பது.
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண ராச்சியம் உருளவாயிற்று. இந்த அரசு போர்த்துக்கேயர் 1619-ல் வடபகுதியை வெற்றி கொள்ளும் வரை நீடித்தது. இந்த யாழ்ப்பாண ராச்சிய ஆட்சியில் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றது. அரசகேசரி, காளிதாசரின் இரகுவம்சத்தை முதனூலாகக் கொண்டெழுதிய செய்யுள் நூல் இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
1619 முதல் 1796 வரை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் பெரும்பகுதியை அரசாட்சி செய்தனர். இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவ சமயம் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவ, சைவ சமயம் சார்ந்த இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின.
1796-ல் ஆல் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலத் திருச்சபையும், அமெரிக்க மிஷனரிகளும் சமய மாற்றத்தை முக்கியமாக மனங்கொண்டு இலக்கியங்களை உருவாக்கினர். இந்தப் போக்குக்கு எதிராக வசன நடைகை வந்த வல்லாளரான ஆறுமுக நாவலர் ( 1822-1879 ) ஒரு இயக்கமாகவே செயற்பட்டார். சைவத்தையும், தமிழையும் வாழ்விக்க வந்தவராக நாவலர் கருதப்பட்டார். அவர் கிறிஸ்தவருக்கு தமிழ் போதித்ததோடு நில்லாது, பைபிளையும் தமிழிலே அழகுற மொழி பெயர்த்தார்.
நாவலரது இலக்கிய, சமயப்பணிகள், தமிழரிடையே பண்பாட்டு இயக்கமொன்றினையே உருவாக்கிற்று. தமிழ் இலக்கியக் கல்வி, இலக்கிய பாரம்பரியம் என்பனவற்றின் ஈழத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதில் நாவலரின் பங்களிப்பு உன்னதாமானது. அவர் நவீன தமிழ் அச்சு, பதிப்புத் துறைகளில் ஈடிணையற்ற சாதனைகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார். இவரது வழியில் தமிழ் தந்த தாமோதரனார் என்றழைக்கப்படும் சி. வை. தாமோதரம் பிள்ள ( 1832-1910) ஆகியோர் உழைத்தனர்.
இலக்கண நூல்கள் ஈழத்தில் தோன்றியது போலவே அகராதிகளும் உருவாகின. 1842-ம் ஆண்டில் போரகராதியும், தொடர்ந்து ''உவின்ஸ்லோ'' அகராதியும் வெளியாகின. இலக்கிய முயற்சிகளுக்கு இது உந்து சக்தியாக அமைந்தது.
ஆர்னல்ட் சதாசிவம் பிள்ள என்பவர் 1866-ல் ''பாவலர் சரித்திர தீபகம்'' என்ற தமிழ்ப்புலவர் சரித்திர நூலை எழுதினார். அத்தோடு சிறுகதைப் போக்கிலமைந்த ''நன்னெறிக் கதாசங்கிரகத்தை''யும் வெளியிட்டார்.
1876-ல் தமிழின் முதலாவது நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளியாகிற்று. இது வெளியாகி ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் கண்டியைச் சேர்ந்தவரான அறிஞர் சித்திலெவ்வை (1838-1898) அஸன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.
1895-ல் தி.த. சரவணமுத்துப் பிள்ளையின் ''மோகனாங்கியும்'', 1891-ல் எஸ் இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதையும் வெளியாகின. இவர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் ''மோகனாங்கி'' நாவல் தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். இதுவே தமிழில் தோன்றியே முதல் வரலாற்று நாவல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.
''இடைக்காடர்'' என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டு எழுதத் தெராடங்கியவர் நாவலாசிரியர் நாகமுத்து (1868-1932). இவர் 'நீலகண்டன்', 'சித்தகுமாரன்' ஆகிய இரண்டு நாவல்களையும, ‘சிறிய வினோதக் கதை'களையும் எழுதியவர். யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களையும் கண்டி, அனுராதபுரம் போன்ற நகரங்களையும் பினனணியாகக் கொண்ட இந்த மண் மணங்கமழும் நாவல் முற்று முழுதாகவே ஒரு ஈழத்துக்கதையாக மிளிர்கின்றது.
இருபதாம் ந}ற்றாண்டு ஈழத்து இலக்கிய முதல்வராகப் புகழ்ந்துரைக்கப்படும் பாவலர் துரையப்பா பிள்ளை (1872-1929) மாகவி பாரதியின் சமகாலத்தவர். இவருடைய படைப்புக்கள் ஈழத்தின் படைப்பிலக்கியத்தினை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் சென்றன.
***
1930-ம் ஆண்டின் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் விளைவாக தமிழக இலக்கியத்தில் ஒரு வேகம் தோன்றிற்று. இலக்கிய முயற்சிகளுக்காகவே 'மணிக்கொடி' தோன்றிற்ற. 1932-ல் இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம், படித்த மத்தியதர வர்க்கத்திடையே இலக்கிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கிற்று. அரசியல் நோக்கத்திற்காக பத்திரிகைகளும் சஞ்சிகைகளுடன் தோற்றுவிக்கப்பட்டன. தென்னிந்திய இலக்கியத் தளங்கள், அக்கால ஈழத்து எழுத்தாளர்களை ஈர்த்தன. எனவே உருவச் செழுமையுடன் சிறுகதைகள் எழுதப்படலாயின. இப்படி எழுத்துத்துறைக்கு வந்த சிறுகரை முன்னோடிகள், இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் இவர்களின் எழுத்துக்கள் தமிழகத்தில் ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன், ஆகிய இதழ்களில் வெளியாகின ஈழகேசரியும் இங்கே கதைகளைப் பிரசுரித்தது. மணிக்கொடியின் மறைவின் பின்னே தமிழகத்தில் ''கலாமோகினி'', ''பாரதா தேவி'', ''சூறாவளி'' போன்ற பத்திரிகைகள் தோன்றின இந்த இதழ்களிலும் ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளரான இம் மூவரும் தொடர்ந்து எழுதினார்கள்.
மணிக்கொடியின் தாக்கம் இலங்கையில் மறு மலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிற்று. இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களான தி.ச. வரதராசன் (வரதர்), அ.செ. முருகானந்தம், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, ச.பஞ்சாட்சர சர்மா ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ''மறுமலர்ச்சி'' என்ற இதழ் வெளி வந்து மூன்று ஆண்டுகள் வெளியாகி நவீன இலக்கியத்தை ஒரு பாய்ச்சலோடு முன்னெடுத்துச் சென்றது. மறுமலர்ச்சியைப் போலவே ஈழகேசரி இதழும் தனது பண்ணையில் பல எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தது. அவர்களில் சு. இராஜநாயகம், சொக்கன், வ. அ. இராச ரத்தினம் சு.வே. கனக செந்திநாதன் ஆசியோரும் அடங்குவர்.
1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிற்று. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், கே. ஏ. அப்பாஸ் ஆகியோர் இதன் முக்கியஸ்தர்கள். இதன் எதிரொலியாக 1940 களில் ஈழத்திலும் முற்போக்கு இடதுசாரி சார்பான எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் தோன்றின. ''பாட்டாளி'', ''பாரதி'' ஆகிய இதழ்கள் கே. கணேஷ், கே. ராமநாதன், எம்.பி. பாரதி ஆகியோரை வெளிப்படுத்திற்று.
1946 ஆண்டில் ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்'' தோன்றிற்று முற்போக்கு எண்ணங் கொண்ட சகல எழுத்தாயளர்களையும் ஒன்றிணைத்து கலை இலக்கிய மேம்பாட்டிற்கு உழைப்பதை இது தனது கொள்கைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்தது. 1956-ம் ஆண்டிலிருந்து உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கிற்று இது.
ஈழத்திலே உருவாக்கப்படுகின்றன தமிழ் இலக்கியம் ஈழத்துமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைக்கவேண்டுமென்ற கருத்து இக்காலப் பகுதியிலே முன் வைக்கப்பட்டது. இந்த ''மண்வாசனை'', ''ஈழத்திலக்கியம்'' என்னும் குரலே தேசிய இலக்கியம் என்கின்ற கருத்தாக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. ''நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார அமைப்பு, நமது கலாச்சாரப் பாராம்பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கமும் விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத்தின் அடிப்படையாகும்'' என்றார் பேராசிரியர் கைலாசபதி.
இந்தப் போக்கு பல்வேறு தளங்களிலும் செறிந்து ஈழத்து எழுத்தை வளப்படுத்திற்று.முற்போக்கு இலக்கிய அணியோடு முரண்பட்ட எழுத்தாளர்கள் தனி அமைப்புகளாக இயங்கினார்கள். யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாற்றம் பெற்று எந்த சித்தாந்தத்தையும் சாராமல் எழுதுகிறது எழுத்தாளர்களாக தனது சார்பாளர்களைப் பிரகடனப்படுத்திற்று. எனினும் இவர்களில் பலர் பிரதேச வழக்குடன் மண்மணம் கமழ எழுதி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக ''யாழ் இலக்கிய வட்டம்'' செயற்பட ஆரம்பித்தது.
1960-ம் ஆண்டு முதல் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாகிற்று. இதன் பயனாக புதிய இளைஞர்கள் எழுத்துத்துறைக்கு ஆர்வத்துடன் வரலாயினர்.
தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்கள் உச்ச கட்டத்திற்கு போனபோது நிறையத் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தமது மனக் கொதிப்பையும் உணர்வுகளையும் அங்கேயே வெளியான பத்திரிகைகள் மூலம் படைப்பிலக்கியங்களாக இவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இவ்விதம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாகியுள்ளது. இதுவே இன்றைய ஈழத்து இலக்கியத்தின் இன்னொரு பரிணாமம்.
***
1960-ஆம் ஆண்டுவரையில் மட்டக்கிளப்பிலே எழுத்தாளர் சங்கம் எதுவும் தோன்றவில்லை.எஸ். பொன்னுத்துரையின் ஆர்வமும், முயற்சியும் கிழக்கு மாகாணத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்ற வழி வகுத்தன. "மட்டக்கிளப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம்", "கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்", "திரிகோணமலை எழுத்தாளர் சங்கம்", "கிண்ணியாத் தமிழ் எழுத்தாளர் சங்கம்" என்பவற்றை இணைந்து கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக எ..ப் எக்ஸ்ஸி நடராசாவும், பொதுச் செயலாளராக எஸ். பொன்னுத்துரையும் பணியாற்றினர்.
கிழக்கிலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு இதன் செயற்பாடு உதவிற்று ஈழத்திலக்கியத்திற்கு வளம் சேர்த்தது.
***
மலையகத் தொழிலாளர் வாழ்வைப் பொறுத்த வரை 1920-1940 வரை முக்கியமான காலமாகும். தஞ்சாவூரில் பிறந்து இலங்கைக்கு வந்து மலையக மக்களுக்கா அல்லும் பகலுமுழைத்த தொழிங்சங்க வாதியான கோ. நடேசைய்யரின் அரும்பணிக்காலம் இது. இவரின் எழுத்துக்கள் மலையக மக்களை எழுச்சியுற வைத்தன. பத்திரிகையாளரான இவர் சிறுகரையும் எழுதியுள்ளார்.
இரவீந்திரநாத தாகூர் 1934 ஆண்டு இலங்கைக்கு வந்தார். அப்போது இருபது வயது நிரம்பிய சி.வி. வேலுப்பிள்ளை என்ற இளைஞர் "பத்மாஜனி" என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதிவைத்திருந்தார். அதை தாகூரிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இதே கவிஞர் மலையக மக்களின் துன்பவாழ்வை வெளியுலகிற்கு தன் கவிதைகள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர் இவர் பாராளமன்றப் பிரதிநிதியானார். 1948-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வஞ்சகமாக மலை நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்தது. சோகமும் சினமுமாக இவரது கவிதைகள் இக்காலத்தில் வெளிப்பட்டன.
1960-ம் ஆண்டுகளில் விழிப்புற்றதொரு மலையகப் பரம்பரை தோன்றிற்று. இவர்கள் புதுமையையும், போராட்டங்களையும் அனல் தெறிக்கும் எழுத்துகளையும் தமது தோழமையாகக் கொண்டவர்கள். 1828-ம் ஆண்டிலிருந்து தோன்றிய மலையக மக்களின் துயரத்தை இவர்களது நெஞ்சம், ஆறாத் தழும்பாகக் கொண்டிருந்தது. இதற்கு அவர்கள் இலக்கிய வெளிப்பாட்டால் எதிர்க்குரல் கொடுத்தன். இதை சி.வி. வேலுப் பிள்ளை ஆதரித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். இப்படி உயிர்த் துடிப்புடன் 1960 களில் தோன்றிய மலையக இலக்கியத்தின் முன்னோடிகளாக என்.எஸ்.எம், ராமையா, கே. கணேஷ், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன் சி. பன்னீர்ச்செல்வம் போன்றோர் தோன்றினார்கள்.
மலையக எழுத்தை வளர்ப்பதில் 'வீரகேசரி'ப் பத்திரிகை பெரும் பங்கை வகித்தது. அதில் தோட்ட மஞ்சரிக்கு பொறுப்பாயிருந்த எஸ்.எம். கார்மேகம் மலையக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி எழுத வைத்தார் சிறுகதைப் போட்டிகள் மூலம் இன்றைய பிரபல மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இவரின் முயற்சிக்கு பெரி கந்தசாமி, இரா. சிவலிங்கம், பொஸ்கோஸ், கருப்பையா, செந்தூரன் ஆகியோர் பக்கபலமாயிருந்தனர். இவர்கள் பொறுப்பேற்றிருந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக எழுத்தாளரை ஸ்தபன அமைப்பின் மூலம் முன்னேறச் செய்தது.
இந்த முக்கியமான பணியை சாரல் நாடன், அந்தனி ஜீவா ஆகியோர் இன்று தொடருகின்றனர். "கொழுந்து", "குன்றின் குரல்", "மல்லிகை" ஆகிய இதழ்கள் மலையக எழுத்தை வளர்ப்பதில் முழு ஆர்வங்காட்டுகின்றன. மலையகச் சிறுகதைகள் சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் பெறுபதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
ஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகம் பெற்றிருப்பது இந்த வரலாற்றின் விளைவுதான்.
***
வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர மேற்கு தென்னிலங்கையில் தனித்துவமானதும் பிரதேச மணங்கமழ்வதுமான படைப்புகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இந்த எழுத்துக்களை உள்ளிடக்கியே ஈழத்து இலக்கியத்தை சரியாக அடையாளங்காட்ட முடியும். முற்றிலும் சிங்கள மொழிச் சூழலிலேயே உள்ள திக்குவலை, மாதத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் தமது சூழலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து வருகின்றார்கள்.
புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், குருணாக்கல், காலி ஆகிய பகுதிகளிலிருந்து பிரமிப்பூட்டும் படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன.
இவையாவும் ஒன்றாகச் சேர்ந்து வளம் பெற்றுள்ள ஈழத்து இலக்கியம், மேலும் பல சாதனைகளை ஏற்படுத்துவதற்கு இத்தகைய தொகுதிகள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும்.
இந்த அறிமுகக் கட்டுரையை எழுதுவதற்கு உதவிய நூல்களும், சஞ்சிகைகளும்.
பேராசிரியர். க. கைலாசபதி
( தமிழ் நாவல் இலக்கியம், சமூகவியலும் இலக்கியமும், இலக்கியச் சிந்தனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் )
பேராசிரியர் கா. சிவத்தம்பி
( நாவலும் வாழ்க்கையும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் )
செம்பியன் செல்வன் - ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்
சி.வி. வேலுப்பிள்ளை – நாடற்றவர்கதை
டொமினிக் ஜீவா – அட்டைப்பட ஓவியங்கள் ( தொகுப்பு)
சுபைர் இளங்கீரன் - தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும். ( தொகுப்பு )
எஸ.எம். கார்மேகம்- கதைக்கனிகள். (தொகுப்பு)
அக்கரை இலக்கியம் (1968. வாசகர் வட்டம் தொகுப்பு ந}ல்)
தேசிய தமிழ் சாகித்தியவிழா 1963 – சிறப்பு மலர்
( அந்தனி ஜீவா) ‘கொழுந்து”
(டொமினிக் ஜீவா) ‘மல்லிகை”
‘குன்றின் குரல்”.
வெள்ளிப் பாதசரம் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளும் அவற்றை எழுதியவர்களும்..
இலங்கையர்கோன் ( வெள்ளிப்பாதசரம், மச்சாள் )
சி. வைத்தியலிங்கம் ( கங்கா கீதம், பாற்கஞ்சி )
கனகசெந்திநாதன் ( கூத்து, வெண்சங்கு )
அழகு சுப்பிரமணியம் ( கணிதவியலாளன் )
வரதர் ( கற்பு )
வ.அ. இராசரத்தினம் ( தோணி, கடலின் அக்கரை போனோரே )
அ.ந. கந்தசாமி ( இரத்த உறவு )
த.ரஃபேல் ( திறமை, கட்டிலேடு கிடந்தவன் )
டொமினிக் ஜீவா ( பாதுகை, வாய்க்கரிசி )
தாளையடி சபாரத்தினம் ( ஆலமரம் )
சிற்பி ( கோவில்பூனை )
எஸ்.பொன்னுத்துரை ( தேர், ஈரா )
யாழ்வாணன் ( அமரத்துவம் )
ப.ஆப்டீன் (புதுப்பட்டிக்கிராமத்திற்கு கடைசி டிக்கட் )
தெளிவத்தை ஜோசப் (பாட்டி சொன்ன கதை, மீன்கள் )
நீர்வை பொன்னையன் ( உதயம்,சோறு )
பத்மா சோமந்தன் ( சருகும் தளிரும் )
செங்கை ஆழியான் ( கங்குமட்டை, அறுவடை )
சி. பன்னீர் செல்வம் ( ஜென்மபூமி )
க. சட்டநாதன் ( உலா )
யோகா பாலச்சந்திரன் ( விழுமியங்கள் )
அ. யேசுராசா ( வரவேற்பு....! )
லெ. முருகபூபதி ( திருப்பம் )
சந்திரா தியாகராசா ( திரிசு நிலத்து அரும்பு )
சாந்தன் ( தே ....... )
அல் அசூமத் ( விரக்தி )
தாமரைச் செல்வி ( பார்வை )
அறிவியல் புனை கதைகள்
செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....
உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....
1.தமிழில் சில வரவுகள்.
தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். சுஜாதாவின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', எம்.ஜி.சுரேஷின் '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', நெல்லை சு.முத்துவின் 'நான்காம் பரிமாணம்' ஜெயமோகனின் 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.
என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மணவை முஸ்தபாவின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு
இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் 'எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
3.அறிவியல் புனைவின் தோற்றம்
உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் 'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர்.
இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.
இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான ஆலன் போ ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு.
இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக 'ஜூல் வெர்னே'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு.
கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம்.
அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது.
இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை.
இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது.
இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர்.
இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது.
இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை.
இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது.
இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது.
இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது.
1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார்.
டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது.
இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது.
டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது.
ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது.
'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார்.
இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது.
டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார்.
டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்
'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது.
மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம்.
*************************
தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி.
கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?
பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.
*************************
ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.
முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள நல்லேர் பதிப்பகம் செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார்.
ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.
இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி
( அகர வரிசையில் புத்தகங்கள் )
01.இசுலாம் - தமிழர் சமயம்
இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.
02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
03.உலகளாவிய தமிழ்
பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
தமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.
05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
06.எல் - யாஎல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.
07.கதமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.
08.குமரிக் கண்டம்கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.
09.சிந்துவெளி நாகரிகம்குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.
10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)
தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)
தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.
12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1
இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2
அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.
14.தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது.
15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
குமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.
16.வானியலும் தமிழரும்வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.
17.Tamil and Hebrew
18.The Babylonian Thamizh
19.தமிழர் எண்ணியல்
20.தமிழர் சமயம்